July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகள்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min read

MK Stalin lays foundation stone for 25 new projects on behalf of the Hindu Religious Endowments Department

17.2.2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, 50 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோவில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 திருக்கோவில்கள்:-

சென்னை, எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவிலில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 16.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி, சென்னை, கோவில்பதாகை, அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் 13.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுக்கள் காப்பகம் அமைக்கும் பணி; ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் வளாகத்தில் மூன்று பொது சுகாதார வளாகங்கள், திருமண மண்டபம் பழுதுபார்த்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவிலில் 7.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி;
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் 6.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; சென்னை, பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் சார்பில் 4.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய பல்நோக்கு வளாகங்கள் கட்டும் பணிகள்; கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை, அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலில் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பணியாளர் குடியிருப்புகள் கட்டும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், இடுகம்பாளையம், அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோவிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; சென்னை, இராயப்பேட்டை, அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி;
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 1.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி; விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை, அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் 1.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி; திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி;

மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சார்பில் அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப் பள்ளிக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டும் பணி மற்றும் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவிலின் கோட்டைச்சுவர் புனரமைக்கும் பணி; மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோவிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி; என மொத்தம் 121.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
15 முடிவுற்ற திட்டப் பணிகள்:-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 20.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொது தரிசன முறை வரிசை, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் கலையரங்கம்; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வண்டிகேட் நுழைவு வாயில் முதல் சோலைமலை முருகன் திருக்கோவில் மற்றும் இராக்காயி அம்மன் திருக்கோயிலுக்கு 9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், 2.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் வளாக மேற்கு புற கோட்டைச் சுவர் மற்றும் 1.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள பெரியாழ்வார் திருவரசு;

சென்னை, பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 6.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் திருக்கோவில் பணியாளர் குடியிருப்புகள், புதிய பல்நோக்கு வளாகம் மற்றும் குடியிருப்பு; விருதுநகர் மாவட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளியசுவாமி திருக்கோவிலில் 3.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருக்குளம் திருப்பணி;

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யனார் திருக்கோவிலில் 2.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் குடியிருப்பு; விழுப்புரம் மாவட்டம், பெருவளூர், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்; கோயம்புத்தூர் மாவட்டம், பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், மருத்துவ மையம் மற்றும் சுகாதார வளாகம் என மொத்தம் 50.79 கோடி ரூபாய் செலவிலான 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.