மாற்றுதிறனாளிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கான நியமன ஆணை
1 min read
Appointment order for lecturers to the differently-abled – Chief Minister issued
18.2.2025
சென்னை மற்றும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் நான்கு மாற்றுதிறனாளிகளுக்கு விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை மற்றும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் குரலிசை, வயலின், தவில் மற்றும் புல்லாங்குழல் ஆகிய பிரிவுகளில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை, மதுரை, திருவையாறு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் குரலிசை, வயலின், வீணை, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகளும் மேற்காண் பிரிவுகளுடன் புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகிய இசைக்கருவிகள் மற்றும் நாட்டுப்புறக்கலையில் பட்டயப்படிப்புகளும், நட்டுவாங்கம் மற்றும் இசையாசிரியர் படிப்புகள் ஓராண்டு பட்டயப்படிப்புகளாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கருவியிசைகளை இளைய தலைமுறையினர் கற்று அக்கலைகளை உலககெங்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டது. சென்னை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பல நாடுகளிலிருந்து இசை ஆர்வமிக்க மாணவர்கள் பயின்று வருகின்றனர். இசைக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதோடு கலை நிறுவனங்களையும் நடத்தி தாங்கள் பயின்ற கலைகளை இளைய தலைமுறையினருக்கு கற்றுத் தருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு கலை பண்பாட்டுத் துறை சிறப்பு ஆட் சேர்ப்புத் தேர்வினை (Special Recruitment Drive) நடத்தியது. இத்தேர்வில் குரலிசைப் பிரிவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கமல்ராஜ், வயலின் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ரா.அமிர்தராஜ் ஆகியோருக்கு சென்னை அரசு இசைக் கல்லூரியிலும், தவில் பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஞா.குமார், புல்லாங்குழல் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரா.சுரேஷ்பாபு ஆகியோருக்கு மதுரை அரசு இசைக் கல்லூரியிலும் விரிவுரையாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (மு.கூ.பொ) கவிதா ராமு ஆகியோர் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.