கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்
1 min read
Edappadi Palaniswami condemns gang rape of student in Coimbatore
18.2.2025
கோவையில் 17வயது மாணவி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த கொடூர செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்” என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
தனக்கு தானே “அப்பா” என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு? பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.
ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா?
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.