July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்திய அளவில் டெங்கு காய்ச்சலுக்கு கேரளாவில் அதிக உயிரிழப்பு

1 min read

Kerala records highest death toll from dengue fever in India

18.2.2025
கோவிட்-19, எச்1என்1 தொற்று, பறவை காய்ச்சல் ஜிகா வைரஸ் போன்ற நோய்கள் தோன்றுவதுடன், பிளேக், ஸ்க்ரப் டைபஸ், லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற தொற்றுகள் மீண்டும் தோன்றுவதும் நாட்டில் தொடர்ச்சியான தொற்று நோய் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன.
இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும் தொற்று நோயியல் விசாரணையை மேற்கொள்வதிலும், தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் தேசிய தொற்று நோய்களுக்கான மையம் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. அது பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த பல நோய்களை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்திருக்கிறது.
இந்த மையம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளா திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியிருப்பதாவது:-

தேசிய தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி 2019 முதல் 2024 வரையிலான கடந்த 6 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இந்த 6 ஆண்டுகளில் 11,04,198 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,516 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 6 ஆண்டு காலக்கட்டத்தில் கேரளாவில் 52,694 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் 301 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் டெங்கு காய்ச்சலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தான் கேரளாவில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. 2023-ம் ஆண்டில் 17,426 பேருக்கும், 2024-ம் ஆண்டில் 18,534 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 2023-ல் 153 பேரும், 2024-ல் 71 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 6 ஆண்டுகளில் 189 பேர் டெங்குவுக்கு இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் 171 பேர் இறந்திருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 147 பேரும், உத்தரபிரதேசத்தில் 132 பேரும் டெங்குவுக்கு இறந்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த காலக்கட்டத்தில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் 2024-ம் ஆண்டில் 21 மாநிலங்களில் டெங்கு இறப்புகள் பதிவாகவில்லை. இந்த ஆண்டில் கூட கடந்த ஒன்றரை மாதத்தில் அங்கு 4 டெங்கு இறப்புகள் நடந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் பரவலுக்கு மூல காரணம் ஏடிஸ் வகை கொசுக்கள் ஆகும். அவற்றை அழிக்கவும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கேரளாவில் டெங்கு காய்ச்சல் அனைத்து காலக்கட்டங்களிலும் பரவியபடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.