மதுரை, திருச்சியில் புதிய டைடல் பார்க்: முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
1 min read
New Tidal Park in Madurai, Trichy: Chief Minister M.K. Stalin lays foundation stone
18.2.2025
மதுரை, திருச்சியில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் .இன்று அடிக்கல் நாட்டினார். 18 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
திருச்சி பஞ்சப்பூரில் சுமார் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த டைடல் பார்க் அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த புதிய டைடல் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த இரண்டு டைடல் பார்க் பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பார்க் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி அண்மையில் உத்தரவிட்டது.