மோடி பெயரைச் சொல்லி டிக்கெட் எடுக்காமல் கும்பமேளாவுக்கு ரெயிலில் பயணித்த பெண்கள்
1 min read
Women in Bihar travel by train to Kumbh Mela without buying tickets after mentioning Modi’s name
18.2.2025
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) டானாபூர் ரெயில்வே கோட்ட மேலாளர் (DRM) ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சில பெண்கள் சிக்கினர்.
அவர் அந்த பெண்களிடம், ஏன்? டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, “நாங்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மோடி ஜி கூறினார்” என்று பெண்கள் நம்பிக்கையுடன் பதிலளித்தனர்.
இதைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்த ஜெயந்த் காந்த் சவுத்ரி சிரித்தபடியே மேலும் உரையாடினார்.
மேலும் அவர்களிடம் பேசியதில், இந்தப் பெண்கள் டிக்கெட் வாங்காமல் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்கு மகா கும்பமேளாவிற்கு (புனித நீராடுதல்) பயணம் செய்தது தெரியவந்தது.
அந்த பெண்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரெயில்வே சட்டங்களுக்கு எதிரானது என்றும் அமைதியாக தெளிவுபடுத்தினார்.
இந்த சுவாரஸ்யமான உரையாடலை நிலையத்தில் இருந்த ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.