தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min read
MK Stalin’s letter to the Prime Minister to release education funds for Tamil Nadu
20.2.2025
தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு: தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது” என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளது. இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது.பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், “சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி மத்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளது கவலை அளிக்கிறது.
ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் மத்திய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். எனவே இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் ” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.