அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள் சொந்த நாடு திரும்ப மறுப்பு
1 min read
US deportees refuse to return to their home countries
20.2.2025
அமெரிக்காவில் சட்டவிரோதமாக (ஆவணங்கள் இன்றி) குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தியது. அவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளனர்.
ஒவ்வொரு நாட்டின் குடிமகன்களையும் வெளியேற்ற கடினம் என்பதால் மொத்தமாக அனைவரையும் பனமா மற்றும் கோஸ்டா ரிகா நாட்டிற்கு நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதற்கு ஏற்றபடி இரண்டு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் நபர்கள், பனமாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள். அங்கிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அந்த வகையில் 300 பேரை பனமாவிற்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இந்த 300 பேரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இந்த 300 பேரில் சுமார் 40 சதவீதம் பேர் சொந்த நாடுகளுக்கு திரும்ப விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பனமா அரசு ஒரு ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவுகள் வழங்கும் பணியை பனமா அரசு செய்து வருகிறது.
இதற்கிடையே பனமா ஹோட்டலில் உள்ளவர்கள், உதவி… உதவி… என கதறி வருகிறார்கள். மேலும், எங்கள் நாட்டில் பாதுகாப்பு இல்லை என எழுதி வெளியே தெரியும்படி ஒட்டி வைத்துள்ளனர்.
இது தொடர்பகா பனமா அதிபர் கூறுகையில் “அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் 299 பேர் பனமா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 171 பேர் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர்.
171 பேரும் ஊடுருவல்காரர்களுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு உதவியுடன் சொந்த நாடு செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் 128 பேர் சொந்த நாடு செல்வதற்கான நடைமுறை இன்னும் நடந்து வருகிறது.
3-வது ஒரு நாட்டிற்கு அவர்கள் அனுப்பப்படுவதற்கான வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த பெண் அவருடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார். சொந்த நாடு திரும்ப மறுக்கும் நபர்கள் தற்காலிகமாக டேரியன் மாகாணத்தில் தங்க வைக்கப்படுவார்கள்” என்றார்.