கிருஷ்ணரின் கர்மபூமியான துவாரகா கடலில் அகழாய்வு தொடக்கம்
1 min read
21.2.2025
குஜராத் மாநிலம் துவாரகா ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது. துவாரகா மற்றும் பெட் துவாரகாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு 18 ஆண்டுகளாக அங்கு எந்த அகழாய்வு பணிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ.) துவாரகா கடலில் ஆழ்கடல் அகழாய்வை தற்போது தொடங்கி உள்ளது. தொல்லியல் துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அலோக்திரிபாதி தலைமையிலான 5 ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், துவாரகா கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளை தொடங்கியதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக அபராஜிதா சர்மா, பூனம்விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்வினா என்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குஜராத் கடற்பகுதியில் கோமதி க்ரீக்கிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் ஆய்வை தொடங்கி உள்ளனர்.