நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்பட 78 பேருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
1 min read
Land scam case: Delhi court summons 78 people including Lalu Prasad Yadav
25.2.2025
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.
2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் தேதி டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இருந்து லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் உள்பட 9 பேருக்கு கடந்த ஆண்டு அக்.7ம் தேதி டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிய லாலு பிரசாத் யாதவ் உள்பட 77 பேருக்கு டெல்லி கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கூடுதலாக தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு சிபிஐ நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர் கோர்ட்டு இந்த சம்மன்களை அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் 30 அரசு அதிகாரிகள் உட்பட 78 பேர் பெயர்களை சிபிஐ குறிப்பிட்டுள்ளது.