அ.தி.மு.க.-பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பரபரப்பு பேட்டி
1 min read
Edappadi Palaniswami, Annamalai sensational interview about AIADMK-BJP alliance
4.3.2025
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, “இது அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் அல்ல.. சென்னையில் நாளை பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். கூட்டணி குறித்து அவசரகதியில் இப்போது எதையும் சொல்ல முடியாது. அமித்ஷா இரண்டு நாளில் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அமித்ஷா தமிழகம் வரும்போது இன்னும் பல மாற்றங்கள் நிகழும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க.வின் நிலைபாடு நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் மோசமான நிலைகள் நிகழ்ந்து வருகிறது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. தி.மு.க. மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் வாக்குகளை ஒருங்கிணைத்து தி.மு.க.வை வீழ்த்துவதுதான் அ.தி.மு.க.வின் தலையாய கடமை. அ.தி.மு.க. கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி இல்ல விழாவில் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்ற நிலையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமையலாம் என பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.