இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது- ஆய்வில் தகவல்
1 min read
90 percent of people in Hindi-speaking states do not know any other language – study finds
6.3.2025
தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியை விட நடைமுறை பயன்கள் அதிகம் உள்ள ஆங்கிலம், இந்தியாவின் இணைப்பு மொழியாக நீடிக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் (Global Data Lab) என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991-ல் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர் என்றும், இது 2011-ல் 22 சதவீதமாக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86 சதவீத்தில் இருந்து 74.5 சதவீதமாக குறைந்தது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் உதாரணத்திற்கு 1991-ம் ஆண்டு பீகாரில் 90.2 சதவீதம் பேர் இந்தியை மட்டும் பேசுவதாக இருந்தனர் என்றும் 2011ல் இது 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ள்ளது.
ராஜஸ்தான், உ.பி. இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் மொழி தேர்வுகளை மீண்டும் ஆய்வு செய்ததில், இந்தி பேசாத மாநிலங்கள் 2-வது மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழுடன், ஆங்கிலமும் தெரிந்தவர்களின் விகிதம் 1991-ல் 13.5 சதவீதமாகவும், 2011-ல் இது 18.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.