சுனிதா வில்லியம்ஸ் 2 வாரங்களில் பூமிக்கு திரும்புவார்- டிரம்ப் உறுதி
1 min read
Sunita Williams will return to Earth in 2 weeks – Trump confirms
8.3.2025
பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், “நம்முடைய 2 விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கேட்டேன். அதற்கு அவர் தயாராகி வருகிறார். இன்னும் 2 வாரங்களில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, “நாங்கள் உங்கள் மீது அன்பு வைத்துள்ளோம். நாங்கள் உங்களை மீட்பதற்காக வருகிறோம். உங்களை அழைத்து வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை” என கூறினார்.
தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் குறித்து பேசிய அவர், “அதிக அடர்த்தியான தலைமுடியுடன் அந்த பெண்ணை பார்க்கிறேன். அவரது தலைமுடியை வைத்து எந்த நகைச்சுவையும், விளையாட்டும் இல்லை” என தெரிவித்தார்.