துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி
1 min read
Vice President Jagdeep Dhankhar admitted to hospital
9.3.2025
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று அதிகாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான ஜகதீப் தன்கருக்கு லேசான நெஞ்சு வலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தலைமையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜகதீப் தன்கரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜகதீப் தன்கரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெகதீப் தன்கரின் உடல் நலம் குறித்து அறிய இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றார். மருத்துவமனையில் ஜெகதீப் தன்கரின் குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடம் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று துணை ஜனதிபதி ஜெகதீப் தன்கர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். விரைவில் உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.