சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்
1 min read
Chennai Thiruvottriyur Vadivudayamman Temple Chariot
10.3.2025
சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோலிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினத்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன் சந்திரசேகரர்-மனோன்மணி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
பின்னர் காலை 9.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தி கோஷங்கள் முழங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட 47 அடி உயரம் கொண்ட தேர், 108 கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரத நாட்டியம், 108 சங்க நாதம் நாதம் முழங்க மாட வீதிகளை சுற்றி வந்தது. பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டன.
தேரோட்டத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி செய்யப்பட்டு இருந்தது. திருவொற்றியூர் எம்.ஆர்.எப்.பில் இருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது.