லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்த வனுவாட்டு பிரதமர்- இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு
1 min read
Vanuatu PM cancels Lalit Modi’s passport, risks extradition to India
10.3.2025
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது மேட்ச் பிக்சிங் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமை பெற்று தஞ்சம் அடைத்தார். இதனையடுத்து, கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது அவரின் இன்டர்போல் குற்றப்பின்னணி தரவுகளில் அவர் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் லலித் மோடி குறித்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அதிகாரிகளின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் லலித் மோடி தற்போது மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரை நாடு கடத்த இந்திய அதிகாரிகள் கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.