இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
1 min read
2.3 million jobs will be created in the artificial intelligence sector in the next 2 years
11.3.2025
2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறியதாவது:-
சர்வதேச ஏ.ஐ. திறன் மையமாக நிலை நிறுத்திக் கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏ.ஐ. துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஏ.ஐ. துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஐ துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல.
சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் ஏ.ஐ. தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன் வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது.
அத்துடன் இது, உலகளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு மாறும் வேகத்தை குறைக்க காரணமாக மாறி உள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.