பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் உள்பட 23 பேர் டிஸ்மிஸ்
1 min read
23 people, including teachers, caught in sexual harassment allegations dismissed
11.3.2025
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.
குறிப்பாக, கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல், திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியானதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மாணவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கக் கூடிய பள்ளிகளில் அரங்கேறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கிடையே, பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், மாணவ – மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்சோவில் கைதாகிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேரை டிஸ்மிஸ் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது வரை 46 போக்சோ வழக்குகள் பள்ளி ஆசிரியர்கள் மீது நிலுவையில் இருக்கும் நிலையில், 23 வழக்கில் இறுதி விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இதனால் 23 பேர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் கல்வி சான்றிதழும் ரத்து செய்யப்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.