மியான்மரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு
1 min read
283 Indians involved in illegal activities rescued in Myanmar
11.3.2025
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட இந்தியாவில் இருந்து ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் – தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.