அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்திற்கு 4 மத்திய அரசின் விருதுகள்
1 min read
4 Central Government Awards for Madurai Division of State Transport Corporation
11.3.2025
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளின் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயல்திறன், வாகன பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக மத்திய அரசின் 4 சிறந்த விருதுகளை பெற தேர்வாகியுள்ளதாக மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: இந்திய அரசின் சாலை போக்குவரத்து-நெடுஞ்சாலை துறையின் அனைத்து இந்திய – மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.
தற்போது தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படியும், போக்குவரத்துத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து கழகங்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. அனைத்து இந்திய – மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2023-24ம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. இதில் மதுரை போக்குவரத்துக் கழகம் மட்டும் 4 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.
இவ்விருதுகளை மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் சார்பில் டில்லியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் புதுச்சேரி கவர்னர் கிரேன்பேடி வழங்கினார். மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளன. பேருந்துகளின் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயல்திறன் (கிராமப்புறம், நகர்ப்புறம்) வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.