தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- கனிமொழி எம்.பி. ஆவேசம்
1 min read
Dharmendra Pradhan should apologize publicly – Kanimozhi MP’s obsession
11.3.2025
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி அந்த கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை பிரச்சினை புயலை கிளப்பியது. திமுக எம்.பி.க்கள்-மத்திய கல்வி மந்திரி இடையே விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி.க்கள் நேர்மையாக இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்பின் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.