July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழலா? – சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

1 min read

Rs. 992 crore in transport contract award? – Anbumani demands CBI probe

11.3.2025
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை நிலையங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லவும், அவை அரிசியாக்கப்பட்ட பிறகு வட்ட கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்லவும் சரக்குந்து சேவையை பெறுவதற்கான ஒப்பந்தத்தை முருகா எண்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ, கார்த்திகேயா எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சந்தை விலையை விட 107 சதவீதம் கூடுதலாக நிர்ணயித்து வழங்கியதால் தமிழக அரசுக்கு கடந்த இரு ஆண்டுகளில் ரூ.992 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அறப்போர் தொண்டு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் இந்த ஊழல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அறப்போர் இயக்கம் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுகளை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. இப்போது ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்கள் தவிர வேறு எந்த நிறுவனமும் இந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்க முடியாத அளவுக்கு விதிகள் திருத்தப்பட்டதாகவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க இந்திய உணவுக்கழகத்தின் தென்னிந்திய இயக்குனர் மறுத்து விட்ட நிலையில், அவரை விடுப்பில் செல்ல வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவருக்கு அடுத்த அதிகாரியான துணை இயக்குனரை வைத்து ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படியானால் இதன் பின்னணியில் கூட்டுச் சதி நடந்திருப்பதாகவே பொருள். இந்த கண்டுகொள்ளாமல் விட முடியாது.
அறப்போர் இயக்கம் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டை தனித்துப் பார்க்க முடியாது. பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையும் இந்தக் குற்றச்சாட்டையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
பொதுவினியோகத் திட்டத்தில் வழங்குவதற்கான அரிசி நியாயவிலைக் கடைகளுக்கு சென்றடைந்த பிறகு கடத்திச் செல்லப்பட வாய்ப்பு கிடையாது. மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி, அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் சரக்குந்துகள் மூலமாகவே கடத்தப்படுவதாக நுகர்பொருள் வாணிபக் கழகத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒருபுறம் அரிசிக் கடத்தல் மூலமும், இன்னொருபுறம் சரக்குந்துகளுக்கு போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதன் மூலமும் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் போக்குவரத்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.