மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருட்களை அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம்
1 min read
Women’s self-help groups can transport goods on government buses free of charge
11.3.2025
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொழில் முனைவோரின் உணர்வை ஊக்குவிப்பதற்காக, சுய உதவிக்குழுக்கள் உறுப்பினர்கள் தங்கள் உற்பத்திப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு சந்தைகளிலும் தங்கள் சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும். இந்த முயற்சியில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சில சமயங்களில் மாவட்டத்திற்குள் தங்கள் விளைபொருட்களுடன் பயணிப்பதிலும், இது தொடர்பான பல்வேறு கண்காட்சிகளுக்காக மாவட்டங்களுக்கு வெளியே வரும்போதும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் இலவச போக்குவரத்து உதவியை, பெண்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும், இது அவர்களின் சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட உதவும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிர் அரசு போக்குவரத்துக் கழக பஸ்ருகளில் 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- அனைத்து நகரப் பஸ்களிலும், (ஏ/சி பஸ்கள் நீங்கலாக) உதவிக் குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும் சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- சாதாரண கட்டண புறநகர் பஸ்களிலும், சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை மட்டும். 100 கி.மீ வரை சுமை கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” நடத்துனர் வழங்க வேண்டும்.
- சுய உதவிக்குழு பெண் பயணிகள் எடுத்து செல்லும் சுமைகள் மற்ற சக பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சுய உதவிக் குழு பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
- சுய உதவிக்குழு பெண் பயணிகள் கொண்டுவரும் சுமைகளை பஸ்களில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பஸ்களை நிறுத்தி இயக்க வேண்டும்.
- அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
- பஸ்சில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக்கூடாது.
- சகபயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
- பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.
- இந்த உத்தரவு குறித்து அனைத்து பஸ் முனையங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- திருப்பிச் செலுத்துதல் தற்போது விடியல் பயணத் திட்டத்திற்கான திருப்பிச் செலுத்துதல் வழங்குவது போல், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளின் நகர பஸ்களின் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு -16 ரூபாய் மற்றும் புறநகர் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு 45 ரூபாய் விதம் பயணச்சீட்டினை கணக்கிட்டு அதனை தணிக்கை செய்து ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் போக்குவரத்துத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல நிலையான இயக்க நடைமுறைகளின் விளக்கத்தினை ஓட்டுனர்கள், நடத்துநர்கள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், நேரக்காப்பாளர்கள், கிளை மேலாளர்கள். மண்டல மேலாளர்கள் மற்றும் அனைவருக்கும் விளக்கிக் கூறி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சுய உதவிக்குழு பெண் பயணிகளின் சுமைகளுக்கு கட்டணமில்லா சுமை பயணச்சீட்டுகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.