July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி அறிக்கை

1 min read

DMK’s double role in the three-language policy has been exposed – Anbumani report

12.3.2025
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,மார்ச்.13-
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்த விவகாரத்தில் தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுவது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை போன்ற தமிழக நலன்களுக்கு எதிரான விஷயங்களில் தி.மு.க. அரசு தொடர்ந்து நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க விருப்பம் தெரிவித்து மத்திய பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் சஞ்சய்குமாருக்கு கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி தமிழக அரசின் அன்றைய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இப்போது வீரமுழக்கமிடும் தி.மு.க. , கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில்,”தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கான வாக்குமூலம் தான் இது என்பதை புரிந்து கொள்ள வல்லுனர்களின் பொழிப்புரையெல்லாம் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, அந்தக் கடிதம் மத்திய அரசுக்கு எழுதப்பட்டதன் நோக்கமே எப்படியாவது மத்திய அரசின் நிதியுதவியைப் பெற வேண்டும் என்பது தான். அதற்காக அந்தக் கடிதத்தில், வல்லுனர் குழு பரிந்துரையைப் பெற்று 2024-25ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்; அதனால் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதியை எங்களுக்கு உடனே வழங்குங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட தொனியை வைத்துப் பார்த்தாலே பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு தயாராகி விட்டதை அறியமுடியும்.
அதுமட்டுமின்றி, தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் நாள் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமின்றி, ”பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள். தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்கிறோம்” என்றும் தெரிவித்திருந்தது.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். ஆனால், தமிழக அரசு அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதே தி.மு.க. அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இப்படியாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு 100 சதவீதம் தயாராகி விட்ட தமிழக அரசு, இப்போது புனிதர்களைப் போல நாடகமாடுகிறது.
மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தையும், நாடகத்தையும் மறைத்து விட முடியாது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான கடிதம் இரு ஊராட்சி மன்ற கவுன்சிலர்களுக்கு இடையே எழுதப்பட்ட கடிதம் அல்ல; தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஆகும். அதில் உள்ள விவரங்களுக்கு தி.மு.க.வினர் அவர்கள் விருப்பம்போல பொழிப்புரை எழுத முடியாது.
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அதை இல்லை என்று தமிழக அரசால் மறுக்க முடியுமா?
தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதன் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடைய உள்ள நிலையில், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்..?
தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் தி.மு.க. அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு உடனடியாக நிறுத்திக் கொண்டு கல்வித்துறையில் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும். பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.