கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு சாதனை விருது
1 min read
Achievement Award for Kovilpatti Postal Division
13.3.2025
தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்
பல்வேறு வகைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக
தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, ஆகிய தலைமை அலுவலகங்கள் உள்ளடக்கிய கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை அலுவலகம் சார்பாக கடந்த 2023-24 ஆம் நிதியாண்டு சிறப்பான முறையில் அஞ்சல் சேவையை வழங்கிய அஞ்சல் கோட்டங்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கும் விழா 10.03.2025 அன்று சென்னையில் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சல் கோட்டங்களுக்கு அந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. அதில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 3 தலைமை அஞ்சலகங்களையும், 61 துணை அஞ்சலகங்களையும் 280 கிளை அஞ்சலகங்களையும் உள்ளடக்கிய கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த வணிக வளர்ச்சி, குறித்த நேரத்தில் விரைவு தபால்கள் பட்டுவாடா, அதிக செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குதல், ஆதார் எண்ணை வைத்து, வங்கி கணக்கிலிருந்து பொதுமக்களுக்கு பணத்தை எடுத்துக் கொடுக்கும் சேவை மற்றும் வணிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் க்யூ ஆர் கோடு மூலம் வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறும் சேவையை அளித்தல் ஆகிய ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் வழங்கினார். இந்த விழாவில் மதுரை மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். விருதுகளை கோவில்பட்டி அஞ்சல் போட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பெற்றுக்கொண்டார்.
விருதுகளை பெற்றுக்கொண்ட கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் கூறியதாவது;-
கோவில்பட்டி அஞ்சல் கோட்டமானது, தென்காசி மாவட்டம் முழுமையும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல அஞ்சலகங்கள் மூலமாகவும் அஞ்சல் சேவையை அளித்து வருகிறது. சிறப்பான முறையில் செயல்பட்டு அதிக விருதுகள் பெற காரணமாக இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொது மக்களுக்கு அஞ்சல் துறை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அஞ்சல் சேவை குறித்த தேவைகளுக்கும் புகார்களுக்கும் பொதுமக்கள் நேரடியாக 04632 221013 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் .