திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா மருந்துகள் காரணமா?- மத்திய இணை மந்திரி பதில்
1 min read
Are corona drugs the cause of sudden cardiac death? – Union Minister of State answers
13.3.2025
மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்வியில், “சுமார் 35 முதல் 55 வயதுடையவர்கள் குறிப்பாக இளைஞர்கள் திடீர் மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இதற்கு கொரோனா காலத்தில் எடுத்துக்கொண்ட மருந்துகள் காரணமா? என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் கூறியதாவது:-
“இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்களின் காரணம் தெரியாத திடீர் மரணங்கள் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், தேசிய தொற்று நோயியல் நிறுவனமும் இணைந்து 2023 மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஓர் ஆய்வை மேற்கொண்டது.
அதில் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசி ஒருமுறை எடுத்துக் கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதும், இரண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு திடீர் மரணத்திற்கான வாய்ப்பு, மேலும் குறைவு என்பதும் இந்த ஆய்வின் மூலம் முதலில் உறுதிப்படுத்தப்பட்டது.
இருப்பினும் இதையடுத்து செய்யப்பட்ட ஆய்வில் கொரோனாவுக்கு முந்தைய மருத்துவ சிகிச்சைகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், 48 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையாக உடற்பயிற்சி செய்தது, அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சிலர் இப்படி திடீர் மரணம் அடைந்தது ஆகிய பின்னணிகளே இந்த திடீர் மரணங்களுக்குக் காரணம் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது. எனவே கொரோனா தடுப்பூசிக்கும் இந்த திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”
இவ்வாறு அவர் கூறினார்.