மாநில அரசுப்பணி தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும்- தேவேந்திர பட்நாவிஸ் அறிவிப்பு
1 min read
State government service exams will now be conducted in Marathi language too – Devendra Fadnavis
13.3.2025
மகாராஷ்டிராவில் இந்தி-மராத்தி என்ற பிரச்சனை வெடித்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை பெரிதுபடுத்தி உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஏற்கனவே மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், சில வேளாண் பொறியியல் தொடர்பான சில தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது தான் இந்தப் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் மராத்தியில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது. மராத்தியில் பொறியியல் படிப்புகளை நடத்த மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த தேர்வுகள் இனிமேல் மராத்தியிலும் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.