குற்றாலம் அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது
1 min read
2 arrested for slashing milk vendor with sickle near Courtallam
14.3.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சியில் பால் வியாபாரியை வழிமறித்து அறிவாளால் வெட்டிய இரண்டு பேர்களை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் போலீஸ் சரகம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46) இவர் அதே பகுதியில் பால் கடை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல் தனது கடையை மூடிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சீனிவாசனின் பைக்கை வழிமறித்த இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி வட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர் இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சீனிவாசனை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் பால் கடை அருகில் வசிக்கும் பெண்களை சில வாலிபர்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர் இதனை சீனிவாசன் கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அந்தப் பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலஇலஞ்சி பகுதியைச் சேர்ந்த திராவிட மணி என்பவரது மகன் இசக்கித்துரை (வயது 24) அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் கைதான இரண்டு பேரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் ஆத்திரத்தில் சீனிவாசனை வழி மறித்து அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியயது தெரிய வந்துள்ளது. உடனடியாக குற்றாலம் போலீசார் இசக்கித்துரை, மணிகண்டன் இருவரையும் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.