ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min read
Assembly session to continue till April 30: Speaker Appavu announces
14.3.2025
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.32 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு நிறைவு செய்தார். சுமார் 2 மணி நேரம் 38 நிமிடம் உரையை வாசித்தார்.
அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வண்ணம் ஒரு நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்துள்ளார். நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினத்தை தவிர அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் நடைபெறும். வருகிற திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு பட்ஜெட் மீதான பொதுவிவாதமும், பதிலுரையும் நடைபெறும்.
அதன் தொடர்ச்சியாக 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ம் தேதி வரை 24 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். அப்போது மானிய கோரிக்கையின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்.
அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்; இது ஒன்னும் புதுசு கிடையாது, அதிமுக தீர்மானத்திற்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளோம். அது சட்டசபையில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.