டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை – செந்தில் பாலாஜி அறிக்கை
1 min read
There is no basis for the allegation of irregularities in TASMAC – Senthil Balaji’s statement
14.3.2025
டாஸ்மாக் கடைப்பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
அதில் 13-03-2025 அன்று மாலை சோதனை தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.
கடைப்பணியாளர்களின் பணியிட மாறுதல் உத்தரவுகள், அவர்களின் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்கள், பணியில் தவறு செய்யும் பணியாளர்களை விடுவித்து அப்பணியிடங்களுக்கு மாற்றுப் பணியாளர்களை நியமித்தல், மனமொத்த மாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 2,157 கடைப்பணியாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரியான முறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி பிப்ரவரி 2023-ல் கோரப்பட்டு, பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் குறைவான தொகை கோரிய ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டது. KYC விவரங்கள், வங்கி வரைவோலைகள் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நிறுவனத்திற்கும் மற்றும் அரசிற்கும் வரவேண்டிய வருவாய் கணக்கிடப்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில போக்குவரத்து ஒப்பந்தம் தொடர்பான வழக்குகள் மாண்பமை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இதில் முறைகேடுகள் எதுவுமில்லை.
கடந்த காலங்களில் நடைபெற்ற மதுக்கூட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு மதுக்கூடத்திலும் குறுமத் தொகை (Upset Price) முறையாக நிர்ணயிக்கப்பட்டு குறுமத் தொகைக்கு மேல் கூடுதலாக கேட்கப்படுபவர்களுக்கு மதுக்கூட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2020-2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுக்கூட ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் நடைபெற்றன.
2023 டிசம்பர் மாதம் மாவட்ட மேலாளரால் மதுக்கூட ஒப்பந்தங்கள் இணையவழி மூலமாக வரவேற்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), உதவி ஆணையர் (கலால்) மற்றும் மாவட்ட மேலாளர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகியோர் அடங்கிய மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்ட கூராய்வுக் குழுவால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் திறக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன.
இதுவரை இணையவழி மூலமாக மதுக்கூட ஒப்பந்த நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன. சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் ஒரு வணிக நிறுவனம். வணிகநோக்கில் மதுபான நிறுவனங்களிடமிருந்து உயரதிகாரிகளுக்குப் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், அக்கோரிக்கைகள் சட்ட, திட்ட விதிமுறைக்களுக்குட்பட்டே பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி உரிய வழிமுறையின் (Formula) அடிப்படையில் ஒவ்வொரு மதுபான வகையின் மூன்று மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அவற்றுடன் கடைசி மாத விற்பனை அளவினை கணக்கிட்டும், அதனடிப்படையிலான கொள்முதல் வெளிப்படையான இணையவழியில் உரிய வழிமுறையில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபுட்டிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே (Bottling Companies)-ல் பணபரிமாற்றங்கள் நடைபெற்றதாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் அந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயானது எனினும், இந்த பணப்பரிமாற்றங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்திடம் இருந்து கூடுதல் கொள்முதலைப் பெற்றதாக தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், இதில் ரூபாய் 1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
இவ்வாறு உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதோடு, இதுதொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.”
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.