த.வெ.க. நெல்லை மாவடட நிர்வாகி மரணம்: விஜய் இரங்கல்
1 min read
T.V. Nellai District Executive passes away: Vijay condoles
15.3.2025
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த விழாவுடன் சேர்த்து பொதுக்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நிர்வாகிகள் நியமனம் தாமதம் தொடர்பாக பொதுக்குழு கூட்ட தேதி தள்ளிப்போனது. கட்சியில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தவிர மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. கட்சியின் சட்ட திட்ட விதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. கட்சியின் செயல்பாடு, கூட்டணி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க இருக்கிறார். இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு, மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 2,500 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி பணிகளுக்காக சென்னை சென்றிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.