கூட்டநெரிசல் 2 பக்தர்கள் சாவு: அமைச்சர்தான் பொறுப்பு என அண்ணாமலை பதிவு
1 min read
2 devotees die in stampede: Annamalai records minister as responsible
18.2.2025
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?
கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.
குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபுதான் இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
இவ்வாறு அண்ணாலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.