July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலையில் 2 பேர் சரண்

1 min read

2 people surrender in the murder of a retired police officer in Nellai

18.2.2025
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
நெல்லை டவுண் பகுதியை சார்ந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாஹீர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி அக்பர் ஷா, கார்த்திக் ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய போலீசார் கூறியதாவது:-

“திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் அவர் திருநெல்வேலி டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தைகாவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) இருந்து வந்தார். ரமலான் நோன்பு தொடங்கிய ஜாகிர் உசேன் வழக்கம் போல இன்று காலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றார்.
தொழுகை முடித்து தமது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது டவுண் காட்சி மண்டபம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்தது. அவர் சுதாரிப்பதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்தோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதனால், படுகாயம் அடைந்த ஜாகிர் உசேன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிகாலை நேரத்தில் அவ்வழியாக சென்றவர்கள் ஜாகிர் உசேன் பிகிலி கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். ஜாகிர் உசேன் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, வக்பு வாரிய சொத்து பிரச்னை தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஜாகிர் உசேன் உறவினர்கள் நெல்லை டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜாகீர் உசேன் உறவினர்களில் ஒருவர், “காட்சி மண்டபம் அருகே பிரதான சாலையில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலி மற்றும் அதே பகுதியைச் சார்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவர் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக ஜாகீர் உசேன் மகள் மோசினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை. உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார். எனவே, உள்ளூர் போலீசார் இவ்வழக்கை விசாரித்தால் சரியாக இருக்காது. உடனடியாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்,”என்று கூறினார்.
இந்த நிலையில், ஜாஹீர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடையதாக நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர் ஷா மற்றும் தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.