July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கல்விக்கடன் வழங்க லஞ்சம் வாங்கிய அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை

1 min read

Government bank employee sentenced to 4 years in prison for accepting bribe

18.3.2025
துாத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள ஒரு தேசியமய வங்கி கிளையில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் வாங்கியதாக பதிவான வழக்கில் வங்கியின் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்தவருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அவ்வங்கியின் முது நிலை மேலாளராக சாமு வேல் ஜெபராஜ், பகுதி நேர ஊழியராக நாராயணன்63, பணிபுரிந்தனர். இரு மாணவிகள் நர்சிங் படிப்பிற்காக அவ்வங்கியில் கல்விக் கடன் கோரி 2010ல் விண்ணப்பித்தனர். கடன் அனுமதிப்பதற்காக ரூ.8000 லஞ்சம் பெற்றதாக சாமுவேல் ஜெபராஜ், நாராயணன் மீது சி.பி.ஐ., வழக்கு பதிந்தது.
மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அந்நீதிமன்றம் இருவரையும் 2018 ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் உயர்நீதி மன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் கடமையை செய்ய வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்படுவதன் மூலம் அல்லது அதை மீறுவதன் மூலம் ஊழலில் ஈடுபடுவதற்கான வழிகளை கண்டுபிடிக்கின்றனர். ஊழல் முறையின் அலைவரிசை பல்வேறு கோணங்களில் பரவுகிறது. போதிய நிதி ஆதாரம் இல்லாமல், ஏழை மாணவர்களால் கல்லுாரி கல்வியைத் தொடர முடியாது.
சமூக நீதியை நிலைநாட்டும் நலத்திட்டமாக கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் எந்த ஒரு மாணவருக்கும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதே அதன் நோக்கம். கல்விக் கடனிற்காக வங்கியை அணுகும் மாணவர் களிடம் இரக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வழக்கில் கல்விக் கடனிற்காக லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

சாமுவேல் ஜெபராஜ் சார்பில் நாராயணன் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டை சி.பி.ஐ., தரப்பு நிரூபித்துள்ளது. விடுவித்து கீழமை நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட் டது அல்ல. அந்நீதிமன்றம் தவறுதலாக விடுதலை செய்துள்ளது. அந்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது சாமுவேல் ஜெபராஜ் இறந்துவிட்டதால் ஊழல் தடுப்பு சட்டப்படி அவருக்கு தண்டனை விதிக்க முடியாது. நாராயணனுக்கு எதிராக சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் தடை எதுவும் இல்லை.

அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. கடன் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.35 ஆயிரத்தை இழப்பீடாக அபராத தொகையிலிருந்து வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.