பங்குச்சந்தை மோசடி வழக்கு: தொழில் அதிபர் கவுதம் அதானியை ஐகோர்ட்டு விடுவிப்பு
1 min read
Stock market fraud case: High Court acquits industrialist Gautam Adani
18.3.2025
ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கில், அதானி நிறுவனத்தின் அதிபர் கவுதம் அதானி, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
முன்னதாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன் மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பு (எஸ்.எப்.ஐ.ஒ.) 2012-ம் ஆண்டு கவுதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தது.
குற்றசதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 2014-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு இந்த வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானியை விடுவித்து இருந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் செசன்சு கோர்ட்டு, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தொழில் அதிபர்கள் 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செசன்சு கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து இருந்தது. மேலும் மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
நேற்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.என்.லத்தா அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.