தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும்– நிதின் கட்காரி தகவல்
1 min read
Toll collection on national highways will remain permanent – Nitin Gadkari
18.3.2025
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. வில்சன், “சாலையை அமைக்க முதலீடு செய்தவர்கள் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் மூலம் அதற்கான தொகையை வசூலிக்கின்றனர். முதலீடு தொகை முழுவதுமாக வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? இதற்கு ஏதாவது தணிக்கை நடைமுறை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, “முன்பு டோல் என்று அழைக்கப்பட்ட கட்டணம் தற்போது பயன்பாட்டு கட்டணம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமான நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் அடிப்படையில்தான் இதில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை சாலை அமைக்க செய்யப்பட்ட முதலீடு மீண்டும் கிடைத்துவிட்டால் சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் இல்லை.
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் – 2008ன்படி, ஒரு சாலை தனியார் உதவியுடன் அமைக்கப்படுகிறது எனில், அதற்கான கட்டணத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை வசூலிக்கலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் அரசு நேரடியாகவோ, அரசு கை காட்டும் அமைப்போ கட்டண வசூலில் ஈடுபடும். இந்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் திருத்தி அமைக்கப்படும். இதனால் சுங்க சாவடியை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை.
தமிழ்நாட்டில் 1,046 கி.மீ., துாரத்துக்கு, 38,359 கோடி ரூபாய் செலவில், 48 நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. இது 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடியவடையும். இருப்பினும் நிலத்தை கையகப்படுத்துவது, நிலத்தின் வகையை மாற்றுவது, மழைக்காலங்களில் சாலை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று பிறக்கப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு, சரியான ஒப்பந்ததாரர்கள் கிடைக்காதது போன்றவற்றால் பணிகளில் இழுபறி நீடிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.