டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணை
1 min read
Appointment order for 217 people selected for the School Education Department through TNPSC
19.3.2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 186 நேரடி நியமன இளநிலை உதவியாளர்களுக்கு 15.03.2025 அன்று இணைய வழியில் பணிநியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பொது நூலகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 24 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 7 பணிநாடுநர்களுக்கும் ஆக மொத்தம் 217 பணிநாடுநர்களுக்கு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசு சிறப்பு செயலர் எஸ்.ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு பொது நூலகத் துறை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர், பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் முனைவர்.பெ.குப்புசாமி, இணை இயக்குநர் முனைவர்.த.ராஜேந்திரன், சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.