மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
1 min read
Cryogenic engine test successful at Mahendragiri ISRO centre
19.3.2025
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளின் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.3 ராக்கெட்டிற்கான சி.இ. 20 கிரையோஜெனிக் இ 15 என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக இங்கு நடந்து வருகிறது. அதன்படி 100 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் காணொலி காட்சி மூலமாக பார்த்தார். இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததால் இஸ்ரோ ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.