July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min read

MK Stalin unveils statue of Sir John Hubert Marshall

19.3.2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் 19.3.1876 அன்று பிறந்தார். 1902-ம் ஆண்டு தனது 26 வயதில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வரலாற்று சிறப்புமிகுந்த சிந்துவெளிப் பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். இந்தியத் துணைக்கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களைப் புரட்டிப் போட்டது இந்த அறிவிப்பு. சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்டார்.
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த காலத்திலேயே இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ரீ மூலம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் (1903-04) நடைபெற்றன. தமிழ் மண்ணின் தொன்மையை உலகம் அறிவதற்கு வித்திட்ட சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்கள் 17.8.1958 அன்று மறைந்தார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலை

சென்னை, எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் 5.01.2025 அன்று நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் தலைமையுரை ஆற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்ததன் மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் நிலை நிறுத்தி காட்டியவர் சர் ஜான் மார்ஷல்.
அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமையாகும் என்றும், சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும் என்றும் புகழஞ்சலி செலுத்தி, பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களுக்கு உருவச்சிலை அமைத்திட அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.