July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை கொலை: “போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.” சட்டசபையில் கேள்வி

1 min read

Nellai murder: “No one can escape the clutches of the law…”, assures the Chief Minister

19.3.2025
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் நெல்லையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர், “நெல்லை மசூதியில் ரமலான் தொழுகை முடித்து வீடு திரும்பிய ஜாஹிர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மூன்று மாதங்களுக்கு முன்பே நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. யார் மீது புகார் அளிக்கப்பட்டதோ அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறை அலட்சியத்தால் குற்றவாளிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த செயலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்படியும் என்னை கொன்று விடுவார்கள் என அவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன. புகாரை உரிய முறையில் விசாரிக்காத காரணத்தினாலே இந்த படுகொலை நடைபெற்றுள்ளது. புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஜாஹீர் உசேன் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக இருவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முகநூல் பக்கத்தில் ஜாஹிர் உசேன் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பிரச்னையில் கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபிக் என்பவரோடு நிலப்பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. மாறி மாறி காவல்துறையில் புகாரும் அளித்துள்ளனர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பதிவிட்ட வீடியோவை தொடர்ந்து எதிரிகளை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றவாளிகள், பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்
சட்டத்தை யாரும் கையில் எடுக்க அரசு அனுமதிக்காது. சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஜவாஹிருல்லா, த.வா.க. வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், பாமக ஜி.கே.மணி, நாகை மாலி, ஷாநவாஸ், நயினார் நாகேந்திரன், தளி ராமசந்திரன், சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நெல்லை கொலை விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.