சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
President Murmu, Prime Minister Modi congratulate Sunita Williams
19/3/2025
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நாசா விண்வெளி வீரர்களை பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்த குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரர்கள் தங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் மனஉறுதியால் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
அவர்களின் வரலாற்றுப் பயணம் உறுதிப்பாடு, குழுப்பணி மற்றும் அசாதாரண தைரியத்தின் உதாரணமாகும். அவர்களின் அசைக்க முடியாத உறுதியை வணங்குகிறேன். அவர்களுக்கு சிறந்த ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் குழுவினர் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளனர்.
விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது மற்றும் அந்த கனவுகளை நிஜமாக மாற்றும் தைரியத்தைக் கொண்டிருப்பதாகும். இந்த உணர்வை சுனிதா வில்லியம்ஸ் தனது வாழ்க்கை முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்களின் பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறோம். துல்லியத்துடன் ஆர்வமும், தொழில்நுட்பத்துடன் விடாமுயற்சியும் இணையும்போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.