ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை
1 min read
Steps to distribute ration items at home
19.3.2025
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர்.காந்தி, ஏழை எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புவதால் நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்பதால் நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்க அரசு முன்வருமா.. ? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நாகர்கோயிலில் ஏற்கனவே 31 நியாய விலைக்கடைகளும், 10 பகுதிநேரக் கடைகளும் இயங்கி வருவதால் நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானலும் ரேசன் பொருட்கள் பெறும் வகையில் திட்டம் இருக்கும் நிலையில், அதைப் போலவே தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன்வருமா..?” என்று கேள்வி எழுப்பினார்.
செங்கோட்டையனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் குறித்து வரும் 20-ம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் பார்வையிட இருப்பதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.