சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரும் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்
1 min read
Sunita Williams and 4 others return to Earth safely
19.3.2025
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை ‘ஸ்பிளாஷ்டவுன்’ என்கின்றனர்.
சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர்.
டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன.
தொடக்கத்தில் தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி விரைந்தது. அப்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக்களில் இந்த நிகழ்வுகள் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தன.
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் கேமராக்கள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர்.
கடலில் இருந்து விண்கலம் மீட்புப் படகில் ஏற்றப்பட்டபோது அதில் இருந்த கடல் நீர் கொப்பளித்து வெளியேறியது.