ஜான் எஃப் கென்னடி படுகொலை பற்றிய 80,000 பக்க ஆவணங்களை வெளியிட்ட டிரம்ப்
1 min read
Trump releases 80,000 pages of documents on John F. Kennedy assassination
19.3.2025
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எஃப் கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் கார் அணிவகுப்பின்போது ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அதிபர் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது.
கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகள் கொலையாளி லீ ஹார்வி ஆஸ்வேலடின் செயல்பாடுகளை விவரிக்கின்றன.
படுகொலைக்கு சில வாரங்களுக்கு முன்பு மெக்சிகோவில் உள்ள சோவியத் மற்றும் கியூப தூதரகங்களுக்கு ஆஸ்வேல்டு மேற்கொண்ட பயணங்களை CIA குறிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அவர் கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதை இது குறிக்கிறது.
படுகொலைக்கு ஒரு வருடம் கழித்து, அதிபர் லிண்டன் பி ஜான்சன் விசாரிக்க நிறுவிய வாரன் கமிஷன், ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டதாகவும், சதித்திட்டத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முடிவு செய்தது.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள கோப்புகளில் உள்ள அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அந்த வாதம் பொருந்தவில்லை. இந்த ஆவணங்கள், கென்னடியின் வாகன அணிவகுப்புக்கு அருகில் உள்ள ஒரு உயரமான பகுதியான புல்வெளி மேட்டில் இருந்து மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றன. எனவே ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டார் என்பதில் இருந்து இது முரண்படுகிறது.
ரஷியாவின் உளவுத்துறையான KGB ஆஸ்வேல்டை கண்காணித்து வந்ததாக தற்போது வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உளவுத்துறையான CIA அறிக்கை ஒன்று , 1963 இல் செப்டம்பரில் மெக்சிகோ நகரத்தில் உள்ள சோவியத் தூதரகத்தில் ஒரு KGB அதிகாரியுடன் ஆஸ்வேல்டு பேசியதைக் குறிக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் கேஜிபியுடன் ஆஸ்வேல்டின் ஒத்துழைப்பையோ அல்லது வழிநடத்துதலையோ உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆஸ்வால்டை KGB நெருக்கமாகக் கண்காணிப்பது உறுதிப்படுத்த முடிகிறது.
இதுபோல பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.