July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்படாதது ஏன்?

1 min read

Why is the Tenkasi District Collector’s office not open? Minister explains

19.3.2025
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன்,
ஐ. பெரியசாமி ஆகியோர் பதிலளித்தனர்.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி சட்டமன்றத்தில் பேசும்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் மிகப்பெரிய அளவில் விபத்துகள் நிகழ்கின்றன. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் பழுதாகி விடுகிறது.

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் அங்குள்ள விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இன்றளவும் திறக்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டுவதற்கு அதிமுக ஆட்சி காலத்தில் தவறான இடம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு விட்டது. எனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது . எனவே வழக்கு முடிந்ததும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

செ. கிருஷ்ண முரளி எம்எல்ஏ:- பழைய குற்றாலத்தில் கடந்த காலங்களில் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இரவு 7 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் 24 மணி நேரமும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்க வேண்டும்.

இதற்குப் பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு சில நேரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதாலும், சில நேரங்களில் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு விடுவதாலும் சுற்றுலா பயணிகள் எப்போதும் போல் குளிக்க முடியவில்லை. என்றார்.

செ. கிருஷ்ணமமுரளி எம்எல்ஏ:-

திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் முடிந்த பிறகும் அதனை நிறைவேற்றவில்லை. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதியம் வழங்கப்படவில்லை அதனை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது:-

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் குஜராத், போன்ற மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து நிதி விடுவிக்கப்படவில்லை எனவே 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. ஆனாலும் தமிழகத்தில் 56 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. இவ்வாறு பதில் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.