இந்தியாவிற்கு தனி பிரவுசர் உருவாக்க மத்திய அரசு திட்டம்
1 min read
Central government plans to create a separate browser for India
21.3.2025
பயனாளர்களின் தரவு(Data) பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யும் வகையில், இந்தியாவிற்கு தனி பிரவுசரை(Browser) உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு போட்டி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறியதாவது;-
“மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்க இந்திய அரசு தற்போது பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவை சேவையில் இருந்து தயாரிப்பு சார்ந்த நாடாக முன்னேற்றுவதே இதன் குறிக்கோள்.
உள்நாட்டு பிரவுசரை உருவாக்க இந்திய அரசு ஒரு போட்டியை அறிவித்தது. இதில் கல்வியாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பிரவுசர் என்பது இணையத்திற்கான நுழைவாயில். ஒரு பிரவுசரை உருவாக்குவது மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான முதல் படியாகும்.
இந்தியாவிற்கான தனி பிரவுசர், நமது நாட்டின் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என்பதால், பயனாளர்களின் தரவு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்திய குடிமக்களின் தரவுகள் இந்தியாவில் மட்டுமே இருக்கும். புதிய பிரவுசர் ஐ.ஓ.எஸ்(iOS), விண்டோஸ்(Windows) மற்றும் ஆண்ட்ராய்ட்(Android) ஆகியவற்றுடன் இணக்கமாக இருக்கும்.”
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.