தென்காசி மாவட்டத்தில் அகில இந்திய நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி
1 min read
Free coaching for All India Entrance Exam in Tenkasi district
21.3.2025
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல்கிஷோர்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.400 லட்சத்திற்குள் இருக்கவேண்டும் இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யவும் மேலும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும். உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் மேலும் கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி, போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளார்கள் .