சுனிதா வில்லியம்சுக்கு எனது சொந்த பணத்தில் இருந்து சம்பளம் வழங்குவேன்- டிரம்ப் அறிவிப்பு
1 min read
Trump announces he will pay Sunita Williams’ salary from his own money
23.2.2025
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
“இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் அதை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்” என கூறினார்.
மேலும் அவர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.430) சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதாவது அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டாலர்களுடன் (ரூ.1 கோடியே 30 லட்சம்) கூடுதலாக 1,430 டாலர்கள் (ரூ.1.22 லட்சம்) வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.