காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் கருத்து ஆதாரமற்றது-ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம்
1 min read
Pakistan’s comments on Kashmir are baseless – India condemns in the UN
25.3.2025
காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் அடிக்கடி ஐ.நா. சபையில் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. அமைதிகாக்கும் படையின் எதிர்காலம் குறித்த விவாதத்தின் போது பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பாத்தேமி, ஜம்மு-காஷ்மீர் குறித்து பேசி இருந்தார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வ தனேனி ஹரிஷ், பாதுகாப்பு கவுன்சிலில் பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். பாகிஸ்தானின் பிரதிநிதி ஜம்மு-காஷ்மீர் என்ற இந்திய யூனியன் பிரதேசம் குறித்து மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இது ஆதாரமற்றது.
இதுபோன்ற தொடர்ச்சியான கருத்துக்களால் அவர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. தற்போதும் உள்ளது. எப்போதும் இருக்கும்.
ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோத மாக ஆக்கிரமித்து உள்ளது. அங்கிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இந்த மன்றத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு நாங்கள் அறிவுறுத்துகி றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.