கோடை வெயில் தாக்கம் பற்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read
Central government issues advisory to states regarding the impact of summer heat
28.3.2025
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்ப வாதம் மற்றும் வெப்பம் தொடர்பான பிற நோய்களை திறம்பட நிர்வகிக்க சுகாதார வசதிகளை தயார்நிலையில் வைக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளத்தில் உள்ள ‘வெப்பம் மற்றும் ஆரோக்கியம்’ குறித்த பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் இந்த சமயத்தில் மிக முக்கியமானவை. எனவே தீவிர வெப்பத்தின் தாக்கத்தைத் தடுக்கவும், நிர்வகிக்கவும், சுகாதாரத் துறைகள் மற்றும் சுகாதார வசதிகளை திறம்பட தயார்படுத்துவதற்கும், இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்புமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
வெப்ப வாதம் மற்றும் வெப்பம் தொடர்பான பிற நோய்களுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறனை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறைகள் தொடர வேண்டும்.
அத்தியாவசிய மருந்துகள், நரம்பு வழி திரவங்கள், ஐஸ் பேக்குகள், அவசரகால குளிர்ச்சியை வழங்க தேவையான அனைத்து உபகரணங்களும் போதுமான அளவு கிடைப்பதற்கு சுகாதார வசதி தயார்நிலை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் போதுமான குடிநீர் கிடைப்பது மற்றும் முக்கியமான பகுதிகளில் குளிரூட்டும் சாதனங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.